புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (36). இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் தனியார் சிம் கார்டு கம்பெனியில் மொத்த விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கரோனா காலத்தில் வேலை இல்லாததால் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி வந்துள்ளார். ஆரம்பத்தில் இதில் பணம் சம்பாதித்துள்ளார். பிறகு அடுத்தடுத்து விளையாடும்போது பணத்தை இழந்துள்ளார். நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தன்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் இழந்ததுடன், மேற்கொண்டு நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரிடமும் ரூபாய் 25 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி எல்லாவற்றையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
அதனையடுத்து, கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலும், கொடுத்த கடன் கொடுத்தவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த விஜயகுமார், ஒரு கட்டத்தில் மன விரக்தியடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் தனது மனைவியின் செல்ஃபோனுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், 'எனது பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்' என்றும், 'எனது செல்ஃபோனை வண்டியில் வைத்துள்ளேன்' என்றும் கூறியுள்ளார். மேலும் "ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும்" என்றும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதனால் பதறிப்போன அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் விஜயகுமாரை தேடினார்கள். அவர் கிடைக்காததால் நேற்று காலை மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை கோர்க்காடு அருகே புதுக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையில், ஒருவர் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக, மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரண்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்-லைன் சூதாட்டத்தால் வாலிபர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.