புதுச்சேரி சட்டசபையில் 2019-2020-ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி துறைவாரியான ஆய்வு கூட்டங்களை முதல்வர் நாராயணசாமி மேற்கொண்டு வந்தார். அதையடுத்து புதுச்சேரி அரசின் பட்ஜெட் தொகையை இறுதி செய்து திட்ட வரையரையை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதற்காக, மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த 13-ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ரூ.8,425 கோடிக்கு திட்ட வரையரை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெறுவதற்காக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
அங்கு அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோருடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகின்றனர். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை சந்தித்து புதுச்சேரியில் புதிய பல்நோக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்த, அதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைவு படுத்த வேண்டும், புதுவையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ராஜீவ், இந்திரா சதுக்கங்களில் மேம்பாலம் கட்ட நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை அனுப்பி வைத்தால் தேவையான உதவியை செய்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை இணையமைச்சரிடம், மாநில அந்தஸ்து கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி யதுடன், புதுச்சேரிக்கான நிதி உதவி கடன் தள்ளுபடி போன்றவற்றையும், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேலிடம் வார இறுதி நாள் சுற்றுலா என்பதனை மாற்றி, வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கான சுற்றுலா தலமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு உதவியளிக்க கேட்டுக்கொண்டனர். மேலும் சில அமைச்சர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.