Skip to main content

சென்னை புறப்பட்ட பொம்மனும் பெள்ளியும்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

 Pomman Belli departed from Chennai

 

உலக அளவில் சினிமா துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதை சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் பெற்றது. இது தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த பொம்மன், பெள்ளி என்ற இரு பழங்குடிகளைப் பற்றிய கதை.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஓசூர் வனப்பகுதியிலிருந்து தாயைப் பிரிந்த குட்டி யானை பொம்மி, முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டது. இந்த குட்டி யானைக்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பாகனாக இருந்து தங்களது பிள்ளை போன்று வளர்த்து வந்தனர். குட்டி யானைக்கும் தம்பதியினருக்கும் இடையே ஏற்பட்ட பாசப்பிணைப்பினை 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற பெயரில் ஊட்டியைப் பூர்விகமாகக் கொண்ட ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி இயக்கியிருந்தார். இந்தப் படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றிருந்த நிலையில், இறுதியாக ஆஸ்கர் விருதையும் வென்றது.  

 

பல்வேறு தரப்புகளில் இருந்து படக்குழுவினருக்கும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பொம்மன் பெள்ளி தம்பதியினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்க இருக்கிறார். இதற்காக பொம்மன் தர்மபுரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டார். அதேபோல் பொம்மனின் மனைவி பெள்ளி முதுமலையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார். கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வழி அனுப்பி வைத்தனர். முதுமலை மற்றும் டாப்ஸ்லிப் முகாம்களில் பணியாற்றும் 10 பாகன்களுக்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அனைத்து பாகன்களுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்