பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேரின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகிய மூன்று பேரை (06/01/2021) அன்று அதிரடியாகக் கைதுசெய்து விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் பின்பு, அவர்களை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு இன்று (03/02/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகிய மூன்று பேரின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 17- ஆம் தேதி வரை நீட்டித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.