அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பா.ஜனதா தலைவர் அமித்ஷா, வருகிற 22, 23, 24-ந் தேதிகளில் தமிழகம் வருகிறார். சென்னை, கோவைக்கு அமித்ஷா வருகிறார். அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இது ஆட்சி மாற்றமல்ல.
தமிழக மாணவர்களை தகுதி நிறைந்தவர்களாக மாற்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி பாராட்டத்தக்கது. தமிழக அரசு நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கேட்பது தமிழக மாணவர்களை நிரந்தரமாக அழிக்கும் செயல். 8-ம் வகுப்பு வரை பாஸ் என்பது தேவையில்லாதது. அவர்களை ஆரம்ப கல்வியில் இருந்து தயார்படுத்த வேண்டும். உலக தரத்தில் போட்டியிடும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
தி.மு.க.- காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கும், அவர்களது செயல் பாட்டுக்கும் சம்பந்தம் இருக்காது. நீட் தேர்வை வலியுறுத்தியதே தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தான். இப்போது நளினி சிதம்பரம் நீட் தேர்வு விலக்குக்கு மேல்முறையீடு செய்வது அரசியல் சித்து விளையாட்டு. இவ்வாறு கூறினார்.