ஈரோடு மாவட்டத்தில் பல நிறுவனங்கள், ஏராளமான தொழிற் சாலைகள்செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கில் வடமாநிலத்தை சேர்தவர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து இங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பெருந்துறை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் செயல்படுகிறது. அதில் பல ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் வேலை செய்கின்றனர். இதில் அவர்களின் சொந்த மாநிலத்தில் குற்றப்பின்னணி உள்ளவர்களும் உள்ளார்கள். அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவ்வப்போது போலீசார் கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அந்தந்த தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் பற்றிய முழு விவரம் அவர்களின் பின்னணி குறித்து முழுவதுமாக தெரிந்த பின்னேரே பணியில் அமர்த்த வேண்டும் என போலீசார் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்த பணிக்கம்பாளையம் கியாஸ் குடோனில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வங்க தேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சோதனை நடத்தினார். அப்போது வங்க தேசத்தை சேர்ந்த 52 வயது முகமது மொட்டி ரகுமான், 40 வயது முகமது சொராத் காஜி, 20 வயது ரபூல் காஜி, 43 வயது முகமது மோக்சத் அலி மேலும் முகமது அன்சாரி, ரகுமான்,மொனி ரூல் இஸ்லாம் , முகமது சபிக்குல் இஸ்லாம், முகமது அஸ்ரம் உஸ்மான், ஹாரிபுல் இஸ்லாம், சபுல்இஸ்லாம் ஆகிய 10 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் வேலை தேடி முதலில் சட்டவிரோதமாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்று அங்கு சில மாதங்கள் தங்கி கட்டிட வேலை பார்த்தது தெரியவந்தது.
அதன் பின்னர் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் ரயில் மூலம் ஈரோடு வந்து பிறகு பெருந்துறை மணிக்கம் பாளையத்திற்கு வந்துள்ளனர். கட்டிட தொழிலாளியாக பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இவர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தனித் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சட்டவிரோதமாக இங்கு வந்து வேலை பார்த்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் பாஸ்போர்ட் , விசா போன்ற முறையான எந்த ஆவணங்களும் இல்லை. பிறகு அவர்கள் பத்து பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டவர்கள் யாராவது சட்டவிரோதமாக வேலை செய்து வருகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தொழிற்சாலைகளுக்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.