புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 73 வயது மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆலிங்கனம் கிராமத்தில் வசித்துவந்த ஒரு மூதாட்டியைக் கொலை செய்து 16 சவரன் நகை, ஒரு லட்சம் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது போன்ற சம்பவங்களால் வீட்டில் தனியாக வசித்துவரக்கூடிய முதியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே முதியவர்களை, குறிப்பாக வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் காப்பாற்ற புதிய திட்டம் ஒன்றை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் நோக்கம், முதலில் வீடுகளில் தனியாக உள்ள முதியவர்களைக் குறித்த முழுமையான பதிவேடு தயார் செய்ய வேண்டும். எனவே மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் 238 காவல் நிலையங்கள் உள்ளன.
இந்தக் காவல் நிலையங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட வீடுகளில், எத்தனை வீடுகளில் முதியோர்கள் தனியாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் குறித்த முழு விபரத்தையும் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி மத்திய மண்டலத்தில் 2,300 முதியவர்கள் வீட்டில் தனியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இனி வீடுகள்தோறும் வருகை பதிவேடு முறையைக் கையாள உள்ளதாகவும் முதியவர்கள் தங்களுடைய பிரச்சினை குறித்து காவலர்களிடம் கூறலாம் என்றும் ஐஜி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு ‘காவலர் விழுதுகள்’ என்று பெயர் வைக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டுவருகிறது.