
குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் கடைசியாக பறந்த காட்சி என வெளியான வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய, அந்த காட்சியைப் படம் பிடித்த அலைபேசியை காவல்துறையினர் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேரின் உயிரைப் பறித்த ஹெலிகாப்டர் விபத்துக் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் விசாரணை அதிகாரியாக நீலகிரி மாவட்ட காவல்துறை ஏ.டி.எஸ்.பி. முத்துமாணிக்கத்தை நியமித்துள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக காட்டேரி பகுதியில் மேகக் கூட்டங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் பறந்ததாக வெளியான வீடியோவைப் படம் பிடித்த நபரின் அலைபேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, அந்த அலைபேசியை கோவையில் உள்ள தடவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
விபத்து நேரிட்ட பகுதியில் உயர் மின்னழுத்தக் கம்பிகள் உள்ளனவா என்ற விவரங்களைத் தருமாறு மின்வாரியத்துக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது. மேலும், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய போது, அங்கு நிலவிய வானிலை குறித்து தெளிவான தகவல்களைக் கேட்டு, சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இவைத் தவிர காட்டேரிக்கு அருகே உள்ள வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், மத்திய அரசு நியமித்துள்ள விசாரணை அதிகாரி மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர், நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.