திருப்பூரில் குவியல் குவியலாக போதை சாக்லேட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கள்ளச் சாராயம் போன்ற சட்ட விரோத மதுவிற்பனை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் பல்லடம் அருகே சின்னகரை என்ற பகுதியில் குவியல் குவியலாக சுமார் 50 கிலோ போதை சாக்லேட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தற்போது கைப்பற்றியுள்ளனர்.
வடமாநிலத்தவர் ஒருவருக்குச் சொந்தமான கடையை உணவுத்துறை அதிகாரிகள் சில நாட்களாகவே நோட்டமிட்டு வந்த நிலையில், அந்த கடையில் போதை சாக்லேட்கள் விற்கப்படுவது தெரியவந்தது. அவர்களை பின் தொடர்ந்து சென்றதில் அதே பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ எடையுடைய போதை சாக்லேட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போதை சாக்லேட்டுகள் குவியல் குவியலாக கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.