சிதம்பரம் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை மீட்டு, மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் சிதம்பரம் இருப்புப்பாதை காவலர்கள் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று (10 பிப்.) காலை ‘ஆபரேசன் ஸ்மைல் 2021’ பணிகள் சம்பந்தமாக, சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜூலியட் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் ஒரு சிறுவன் சுற்றித் திரிந்ததைக் கண்டு, அவர்கள் சிறுவனை அழைத்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர், தனது பெயர் நிஷாந்த் (16), தந்தை பெயர் அன்பு, சத்ரபதி சிவாஜி தெரு, அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் எனக் கூறியுள்ளார். மேலும் சிறுவனின் தந்தை வேலைக்கு போகச் சொல்லி திட்டியதால் கோபித்துகொண்டு நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் சென்று அங்கிருந்து திருச்செந்தூர் விரைவு வண்டியில் சிதம்பரத்திற்கு வந்ததாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் உத்தரவின்படி, சிறுவனின் தாய் மற்றும் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுவனை கடலூர் மாவட்ட சைல்டு லைன் உறுப்பினர் சதீஷ்குமாரிடம் மாலை 3.45 மணிக்கு ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், மகளிர் தலைமை காவலர்கள் கோமதி, சாந்தி, காவலர்கள் ராம்குமார், ஆகியோர் இருந்தனர்.