முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம் ரூபாய் 25,56,000 மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இரண்டுமுறை இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இன்று காலை அவர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முன்னிலையில் ஆஜரானார். காலை முதல் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 6 மணி நேரத்தைக் கடந்தும் அவரிடம் போலீஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நாளை மேலும் தொடருமா? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.