கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் உரிமம் பெறாத 114 நாட்டுத்துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் பலர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்றும், அல்லது பொது இடத்தில் வைத்துவிட்டுச் செல்லலாம் என்றும் காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்டக் காவல்துறையினர், திடீரென்று அந்தந்த காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இத்தகைய அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கிருஷ்ணகிரி அருகே அகத்திப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு நாட்டுத்துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றினர்.
குருபரப்பள்ளி பீமாண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒரு நாட்டுத்துப்பாக்கியும், கே.ஆர்.பி அணை அருகே துடுகன அள்ளி மாரியம்மன் கோயில் பின்புறத்தில் 3 துப்பாக்கியும், மஹாராஜாகடை அருகே நாரலப்பள்ளி ஊராட்சி அலுவலகம் அருகில் இரண்டு துப்பாக்கிகள் உள்பட பல்வேறு இடங்களில் வீசப்பட்டு இருந்த 50 நாட்டுத்துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அதேபோல் கடந்த செப். 30ம் தேதி நடந்த திடீர் சோதனையின்போது தேன்கனிக்கோட்டை சரகத்தில் 24 நாட்டுத்துப்பாக்கிகளும், தளி பகுதியில் 40 நாட்டுத்துப்பாக்கிகளும் என மொத்தம் 64 நாட்டுத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.