Skip to main content

பெண் எஸ்.ஐ. - காவலர் இடையே டிஷ்யூம்...டிஷ்யூம்! சேலம் காவல்துறையில் பரபரப்பு! 

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

police incident in salem district


வாழப்பாடி மகளிர் காவல்நிலைய பெண் எஸ்.ஐ.க்கும், பெண் காவலருக்கும் இடையே வலுத்துள்ள நீயா? நானா? மோதல் விவகாரம், மாவட்டக் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் மல்லிகா (வயது 49). இங்கு, 4 தலைமைக் காவலர்களும், 6 முதல்நிலைக் காவலர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முதல்நிலைக் காவலர் சசிகலா மீது, எஸ்.ஐ. மல்லிகா கடந்த மே மாதம் 15- ஆம் தேதி, மாவட்ட எஸ்.பி.,க்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார்.

 

அதில் கூறியுள்ளதாவது, "முதல்நிலைக் காவலர் சசிகலா, துறை ரீதியான பணிகளை சரிவர செய்வதில்லை. சக காவலர்களிடமும், என்னிடமும் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார். புகார் கொடுக்க வரும் பொதுமக்களைத் திட்டியும், மிரட்டியும் வருகிறார். 

 

கடந்த பிப்ரவரி 18 மற்றும் 19- ஆம் தேதிகளில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணி முடிந்து, காவல்நிலையம் வராமல் வீட்டிற்கு ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இது தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. விளக்கம் கேட்டபோது, எஸ்.ஐ.யிடம் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்று விட்டேன் என்றும், இனி இதுபோல் தவறு நடக்காது என்றும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். 

 

இந்நிலையில், கடந்த மார்ச் 12- ஆம் தேதி மருத்துவ விடுப்பு வேண்டும் என்றார். உடல்நிலை பாதிப்பு குறித்து மனுவாக எழுதிக் கொடுக்குமாறு சொன்னதற்கு அவர் மறுத்துவிட்டார். அவர், தான் அமர்ந்து இருந்த பிளாஸ்டிக் சேரை தள்ளி விட்டு, நீ என்ன யோக்கியமா? நீ எல்லாம் லீவுல போவதில்லையா? என்று என்னை ஒருமையில் திட்டினார். 

 

விடுப்பு வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அதன்பிறகு, அவருக்கு விடுப்பில் செல்ல அனுமதித்தேன். அவருடைய ஒங்கீனமான நடவடிக்கைகள் கண்ணியமிக்க காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துவது போல் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

இந்தப் புகார் தொடர்பாக வாழப்பாடி மகளிர் காவல்நிலைய வட்டாரத்தில் விசாரித்தபோது, பெண் எஸ்ஐ மல்லிகா மீதும் பல்வேறு புகார்கள் சொல்லப்பட்டன. 

 

வாழப்பாடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி, நான்கு மாதங்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். அப்போது ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, சென்ட்ரி எனப்படும் நிலைய 'பாரா' பணி பார்க்கும் பெண் காவலர்களிடம் 30 மணி நேரம் வரை தொடர்ச்சியாக வேலை வாங்கியுள்ளார் எஸ்.ஐ. மல்லிகா. 

 

பொதுவாக சென்ட்ரி பணிக்கு வரும் காவலர்கள் காலை 8 மணி முதல் மறுநாள் காலை 08.00 மணி வரை 24 மணி நேரம் காவல் பணியில் இருக்க வேண்டும். சங்கீதா என்ற பெண் காவலர், காலை 08.00 மணிக்கு சென்ட்ரி பணிக்கு வந்தால், அவரை கம்ப்யூட்டரில் சிஎஸ்ஆர் ரசீது தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுத்தி உள்ளார். இப்பணிகளை முடித்துவிட்டு மாலை 06.00 மணிக்கு மேல் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதாவது, 30 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பணியாற்ற வைத்துள்ளார். 

 

கடும் பணிச்சுமை மற்றும் எஸ்ஐ மல்லிகாவின் விரட்டல் காரணமாக பெண் காவலர்கள் அடிக்கடி மருத்துவ விடுப்பிலும் சென்றுள்ளனர். பெண் காவலர் சசிகலா மீதான புகார் குறித்து அவரிடம் பேசினோம்.''எனக்கும், மல்லிகா எஸ்.ஐ.க்கும் எந்த வித தனிப்பட்ட விரோதமும் கிடையாது. ஆனால், என் மீது சில உள்நோக்கத்துடன் அவர் எஸ்.பி.யிடம் பொய்யான அறிக்கை அளித்துள்ளார். 

 

police incident in salem district

 

கடந்த 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை, மருத்துவ பரிசோதனை செய்வதற்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர், சிறுமிகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அவரை தங்க வைக்க எந்த காப்பகத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. 

 

அதன்பின்னர், வாழப்பாடி டி.எஸ்.பி. முத்துசாமி அறிவுரையின்பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணை அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டு, அதிகாலை 02.30 மணியளவில் வீட்டுக்குச் சென்றேன். அன்று காலை 09.00 மணிக்கு பணிக்கு வந்த நான் அதிகாலையில்தான் பணி முடிந்து ஓய்வுக்குச் சென்றேன். 

 

மறுநாள், என்னை செல்போனில் தொடர்பு கொண்ட மல்லிகா எஸ்.ஐ., டி.எஸ்.பி. கேட்டால் நீயும், நானும் சேலம் ஜி.ஹெச்சில் இருப்பதாகச் சொல்லும்படி கூறினார். அதேநேரம், என் செல்போனுக்கு வந்த டி.எஸ்.பி., என்னிடம் எங்கே இருக்கீங்க என்று கேட்டார். நான் வீட்டில் இருப்பதாக உண்மையைச் சொன்னேன். 

 

சிறிது நேரத்தில் மீண்டும் என்னை தொடர்பு கொண்ட எஸ்.ஐ., மல்லிகா, 'எதற்காக டி.எஸ்.பி.யிடம் உண்மையைச் சொன்னீங்க? அவருடைய ஃபோனை எடுக்காமல் இருந்திருக்கலாம்ல? போச்சா... இன்னிக்கும் மாட்டிக்கிட்டேனா...?,' என்று சொல்லிவிட்டு, பேச்சை துண்டித்து விட்டார். 

 

இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவர் என்னை உள்நோக்கத்துடன் நடத்தத் தொடங்கினார். நான் மருத்துவ விடுப்பு கேட்டபோது, உங்கள் விடுப்பை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதையடுத்து, மருத்துவரிடம் சிக் பாஸ்போர்ட் வாங்கி வந்த பிறகு, டி.எஸ்.பி. சொன்னதால்தான் விடுப்பு கொடுப்பேன் என்றார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், விடுப்பு தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லவும் இல்லை... நாற்காலியை பிடித்து இழுக்கவும் இல்லை. 

 

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை முடித்துவிட்டு பணியில் இருந்த ஏட்டு வைரமணி அறிவுறுத்தலின் பேரில்தான் நானும், சங்கீதாவும் ஓய்வுக்குச் சென்றோம். ஆனால் என்னை வேண்டுமென்றே, டி.எஸ்.பி .அலுவலகத்தில் நிற்க வைத்தார் மல்லிகா எஸ்.ஐ., 

 

அங்கு, ஒன்றரை மணி நேரம் கண்ணீருடன் முறையிட்ட பிறகும் கூட, எஸ்.ஐ. அனுமதியின்றி தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்றதாக எழுதிக் கொடுத்தால்தான் பணிக்கு அழைத்துக் கொள்வோம் என்றதால், அதன்படியே எழுதிக் கொடுக்க வேண்டியதாகியது. இப்போது அந்த விளக்கக் கடிதத்தையே, என் மீதான புகாருக்கு ஆதாரமாக சொல்லி இருக்கிறார் எஸ்.ஐ., மல்லிகா,'' என்றார் காவலர் சசிகலா. 

 

இது தொடர்பாக எஸ்.ஐ. மல்லிகாவிடம் கேட்டபோது, ''காவலர் சசிகலா சின்ன புள்ள. அறிந்தும் அறியாமலும் செய்கிறார். அந்தப் பொண்ணோட கெட்ட நேரமோ என்னவோ ஒரு தவறு நடந்துவிட்டது. எல்லாம் ஒரு குடும்பமாக இருக்கணும். அவரால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம். எல்லாவற்றையும் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாதுங்க சார். 

 

அதிகாரிகளிடம் பணிந்துதான் போகணும். இரு நாள்களுக்கு முன்பும் கூட இன்ஸ்பெக்டரிடம் தற்கொலை செய்து கொள்வதாகவும், வேலை வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறார். ஆள் இல்லைனு வேலை பார்க்கச் சொன்னால் ஷார்ட் டெம்பர் காரணமாக டென்ஷன் ஆகிவிடுவார். அந்தப் பொண்ணு சரியாக பேசக்கூடிய பொண்ணு இல்லீங்க சார். டி.எஸ்.பி. போன் செய்தால் நானும் ஜி.ஹெச்சில் இருப்பதாகச் சொல்லச்சொன்னதாக சொல்வதில் உண்மை இல்லை,'' என்றார். 

 

இதுபற்றி காவல் ஆய்வாளர் தனலட்சுமியிடம் கேட்டபோது, ''ஆள்கள் கம்மியாக இருப்பதால் சென்ட்ரி டூட்டி கூடுதல் நேரம் பார்க்க வேண்டியதாகிறது. எல்லோருக்கும் விடுப்பு, ஓய்வு வழங்குகிறோம். எஸ்.ஐ. மல்லிகா, காவலர் சசிகலா மீது என்ன ரிப்போர்ட் அனுப்பினார் என்று எனக்குத் தெரியாது. அப்போது நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன். சசிகலா பணியில் சரியாக இருப்பார். ஆனால், கொஞ்சம் ஷார்ட் டெம்பர்,'' என்று பட்டும் படாமலும் சொன்னார்.  

 

பெண் எஸ்.ஐ.க்கும், முதன்மைக் காவலருக்கும் இடையே நடக்கும் பனிப்போர், சேலம் மாவட்டக் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்