சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் நகைக் கடை அதிபர் ஸ்ரீதர்(36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில் இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். முதல் தளத்தில் ஜே.எல் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி கடையின் முன்பக்க ஷட்டரை வெல்டிங் மிஷினால் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில் ஒரு தனிப்படை ஹைதராபாத்திற்கும் மற்றொரு தனிப்படை பெங்களூருக்கும் சென்றது. மேலும் நகைக் கடை அமைந்திருக்கும் சாலையில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொள்ளையர்கள் இன்னோவா கார் பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், ஜே.எல் கடையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய இன்னோவா காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்தக் காரில் கொள்ளையர்கள் ஏதேனும் தடையங்களை விட்டுச் சென்றுள்ளனரா என்றும் போலீசார் காரை சோதனை செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.