நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், கடந்த 14ஆம் தேதி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தினார். அதில் கலந்துகொண்டு பேசிய சண்முகம் திமுகவை காரசாரமாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது மது போதையில் இருந்த ஆசாமி ஒருவர் திமுகவை விமர்சனம் பேசுவதை நிறுத்து என்று கூறி சத்தம் போட்டதாகவும் அதைக் கேட்டு கோபம் அடைந்த சண்முகம் நாங்கள் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம், என்றும் திமுக அமைச்சர் பொன்முடியை குறிப்பிட்டு அவதூறு பேசியதாகவும் கூறப்படுகிறது.
போதை ஆசாமி குறித்து போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என போலீசாரையும் சண்முகம் தாக்கிப் பேசியதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியது. உள்நோக்கத்தோடு அவமதிப்பு செய்யும் வகையில் அநாகரிகமாக பேசியது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.