கரோனாவிலிருந்து தற்போதுதான் மக்கள் தங்களுடைய இயல்புநிலைக்கு மாறி வருகின்றனர். கரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்த நேரத்தில், பலர் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர். இதனால், மக்களின் வாழ்வாதாரமே பெரிய கேள்விக் குறியாகி இருந்தது. கடந்த மார்ச்சிலிருந்து அக்டோபா் வரை முழுமையான பாதிப்பைச் சந்தித்த மக்கள், அடுத்த இரண்டு மாதங்களில் சில தளர்வுகளைப் பெற்றுள்ளனர். ஆனால், மீண்டும் கரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தற்பொழுது வரும் தகவல் பலருக்கும் பதற்றத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழகக் காவல்துறை கடந்த சில மாதங்களாக எந்தவிதப் பெட்டி கேஸும் போடாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை வளைத்து வளைத்துப் பிடித்து பெட்டி கேஸ் போட்டு வருகின்றனர். இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கை எதற்காக என்று விசாரித்தோம் அதில், "தமிழகக் கூடுதல் காவல்துறை தலைவராக உள்ள ராஜேஷ் தாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வந்தபோது, அவருக்காகச் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள நெல்லை வந்தார். அப்போது திருச்சிக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவல்துறை ஆணையா், ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளின் அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பின், 'தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் தினமும் சுமார் 200 பெட்டி கேஸ் கண்டிப்பாகப் போட வேண்டும்' எனத் திருச்சியில் இருந்தே ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்" எனச் சொல்லப்படுகிறது.
இந்த உத்தரவு குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், இவர் பொறுப்பேற்ற பின்பு காவல்துறை தலைவர் திரிபாதியின் அதிகாரம் சற்று குறைந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் தமிழகம் முழுவதும் பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதில், இந்த பெட்டி கேஸ் போடும் உத்தரவும் ஒன்று. இந்த உத்தரவால் காவல்நிலையங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், குற்றம் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வழக்குகளை விசாரணை செய்ய காவல்நிலையங்களில் இருப்பதே இல்லை. காவல்நிலையங்களில் அதிகாரிகளே இல்லாமல் அனைவரும் சாலையில் நின்று இருசக்கர வாகனங்களைப் பிடித்து கேஸ் போடும் பணியைமட்டுமே செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "தற்போதுதான் இயல்புநிலைக்குத் திரும்பிவர ஆரம்பித்துள்ளோம். கையில் வருமானம் இல்லாமல் திணறி வரும் நிலையில், ஹெல்மட் இருந்தால் மாஸ்க் போடவில்லை என்று ஒரு கேஸ், மாஸ்க் இருந்தால் ஹெல்மட் போடவில்லை என்று ஒரு கேஸ் எனப் பதிவு செய்கின்றனர். எங்களில் பலருடைய ஒரு நாள் வருமானமே 300 ரூபாய் தான். அதில், 100 ரூபாயை காவல்துறைக்குக் கொடுத்துவிட்டுப் போவது வேதனையாக உள்ளது. அதிலும், இந்தக் கரோனா காலத்தில் வேலை கிடைப்பதே அரிதான காரியமாகிவிட்டது. கிடைத்த வேலையைச் செய்து கொண்டு தினக்கூலிகளாக வாழும் பலரை இப்படி மடக்கிப் பிடித்து வசூலிப்பது என்பது நியாயமற்ற செயல்" என்று கூறுகின்றனர்.