கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை மதுரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த மெர்லின் தாம்சன் என்பவருக்கு சென்னையை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் தர வேண்டிய கடன் தொகையை திரும்ப பெறுவது சம்மந்தமாக தன்னுடைய அண்ணன் எபினேசரிடம் சொல்லி உள்ளார்.
இந்த விசயத்தை தெரிந்த மேற்படி எபிநேசரிடம் வேலை பார்த்து வந்த செல்வநாயகம் என்பவர் தன்னுடைய உறவுக்காரரான வரிச்சியூர் செல்வம் எனபவர் மூலமாக வசூல் செய்த விடலாம் என்று கூறி அறிமுகம் செய்து வைத்ததன் பேரில் மேற்படி மெர்லின் தாம்சன், வரிச்சியூர் செல்வத்தை அணுகியுள்ளார்.
மேற்படி கடன் தொகையை வசூலித்து தர தனக்கு ரூபாய் 10 லட்சம் கொடுத்தால் கடன் தொகையை திரும்ப பெற்று தருவதாக வரிச்சியூர் செல்வம் சொல்லியுள்ளார். அதனை ஏற்று முன் பணமாக ரூபாய் 5 லட்சம் தாம்சன் கொடுத்துள்ளார். மேலும் தாம்சனின் அண்ணனுக்கு சொந்தமான வால்வோ காரையும் வரிச்சியூர் செல்வத்திடம் கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக கடன் தொகையையும் தரவில்லை, முன் பணம் மற்றும் காரையும் திரும்பித் தரவில்லை வரிச்சியூர் செல்வம். கடன் தொகையை வசூலித்து தராதததால் 5 லட்சம் மற்றும் காரையும் திரும்பித் தர வேண்டும் என கேட்டு மதுரை சென்ற மெர்லின் தாம்சன், எபிநேகர், செல்வநாயகம் ஆகிய தங்கள் 3 பேரையும் வரிச்சியூர் செல்வம் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று மெர்லின் தாம்சன் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை பெற்ற போலீசார், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு நபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.