கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்( 40) இவர் கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு சந்தியா, செவ்வந்தி என்ற 2 மகள்களும், சரண்குமார், நிதிஷ், நிக்காஸ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
சக்திவேல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் முத்துலட்சுமி தனது கணவரை இழந்து 5 குழந்தைகளுடன் ஆதரவின்றி சிதிலமடைந்த குடிசையில் வாழ்ந்துள்ளார். மேலும் இந்த குடிசையில் காற்று, மழை நேரத்தில் உள்ளே இருக்க முடியாது. மிகவும் மோசமான சூழ்நிலையில் அந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கணவரின் விபத்துக்கு நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரி விருதாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய ராஜிடம் முத்துலட்சுமி மனு அளித்துள்ளார். அப்போது முத்துலட்சுமி தனது 5 குழந்தைகளுடன் இருந்ததை பார்த்து அவர் விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது இதையடுத்து டிஎஸ்பி ஆரோக்கியராஜ் ஏற்பாட்டின் பேரில் அந்த 5 குழந்தைகளுக்கும் கல்வி செலவுக்கு தேவையான உதவிகளை தன்னுடைய சொந்த செலவில் செய்துள்ளார்.
மேலும் அந்த குடும்பத்திற்கு நல்ல வீடு ஒன்று கட்டி தர வேண்டும் என முடிவு செய்த அவர் விருத்தாச்சலம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள காவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து உதவும் காவல் இதயங்கள் என்ற வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்துள்ளார். பின்னர் இது குறித்து தகவலை அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பதிவு செய்துள்ளார். பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் அவர்களால் முடிந்த வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்ட், ஜல்லி, மணல் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் வீடு ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த வீட்டிற்கு கருணை இல்லம் என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது இதில் காவல்துறையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் உறவினர் வீடுகளில் புதுமனை புகுவிழா நடைபெற்றால் என்ன சீர்வரிசை செய்வார்களோ அதே போல் சீர்வரிசையுடன் வந்திருந்தனர். இந்த புதுமனை புகுவிழாவிற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் கலந்து கொண்டு புதிய கருணை இல்ல வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அந்த குடும்பத்தினரிடம் வீட்டின் சாவியை ஒப்படைத்தார். வீட்டின் சாவியை வாங்கிய அவர்கள் காலில் விழுந்து கும்பிட முயற்சித்தபோது அவர் தடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து இதற்கு முயற்சி எடுத்த டிஎஸ்பி ஆரோக்யராஜை மாவட்ட எஸ் பி பாராட்டினார். இந்நிகழ்வு அந்த கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அனைவருக்கும் அந்த கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்வு அந்த கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.