கடந்த அதிமுக ஆட்சியின் சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 01ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
இதனை எதிர்த்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடத்திவருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம் பகுதிகளில் நேற்று முன்தினம் (01.11.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் வடலூரில் நேற்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வடலூர் - சென்னை நான்கு சாலை சந்திப்பில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி தலைமையில், மாநில நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், சிலம்புச்செல்வி, த. அசோக்குமார், சண். முத்துக்கிருஷ்ணன், காசிலிங்கம், முத்து. வைத்தி, மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கோபிநாத், கார்த்திகேயன், சசிகுமார் ஆகியோர் முன்னிலையில் திடீர் சாலைமறியல் நடைபெற்றது. இதனால் சென்னை - கும்பகோணம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காவல்துறையினர் போராட்டக் குழுவினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.