சீன அதிபரை சந்தித்து பேசுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். பிரதமருக்கு செண்டை மேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல,கணேசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த், ஜான் பாண்டியன், கிருஷணசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றடைந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா- சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.