மேச்சேரி அருகே, முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள காமனேரி கொண்டமுத்தான் பெருமாள் கோயில் அருகே, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து அறிந்த அவ்வூர் மக்கள், சாத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அவர் மேச்சேரி காவல்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜன. 20) புகார் அளித்தார்.
ஆய்வாளர் பாலமுருகன், எஸ்ஐ அருண்குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலம் கிடந்த இடத்தின் அருகில், ஒரு மோட்டார் சைக்கிளும், ஆதார் கார்டும் கிடந்தது. அதை வைத்து விசாரித்தபோது, சடலமாகக் கிடந்தவர் பெயர் பாலசுப்ரமணியம் (62), காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலசுப்ரமணியத்தை மர்ம நபர்கள் இரும்பு கம்பி அல்லது தடியால் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக பாலசுப்ரமணியம், கிரஷர் இயந்திரங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர், சேலத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி, செலவடை அருகே உள்ள ஜோதிடர் ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்து வந்ததும், முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக பாலசுப்ரமணியத்தின் நண்பர்கள் இருவரிடம் மேச்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.