Skip to main content

தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை... பரிசோதனை முடிவை வைத்து டாக்டர்கள் கூறிய முடிவு!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

Infanticide in the womb of a vaccinated pregnant woman? The result of the examination and the results stated by the doctors

 

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள 6 மாத சிசு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே இருக்கும் பத்ரகாளிபுரத்தில் வசிப்பவர் ஜெகன். இவர் டொம்புச்சேரியில் உள்ள ஒரு வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறார். இவருடைய மனைவி இருதயரோசி சில்வியா, இவர்கள் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

 

இந்த நிலையில், இருதயரோசி சில்வியா கர்ப்பமானார். அவர் டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகாலத்தைப் பதிவுசெய்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் (10.07.2021) ஜெகன் தனது மனைவியைக் கர்ப்பகால பரிசோதனைக்காக டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த மருத்துவக் குழுவினர், தற்போது கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்துவருவதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பரிந்துரை செய்தனர்.

 

அதன்படி ஜெகன் தனது மனைவியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட பின்னர் இருதயரோசி சில்வியா தேனியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்தார். அங்கு பரிசோதனை முடிவை வாங்கிக்கொண்டு டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர். அங்கு பரிசோதனை முடிவைப் பார்த்த டாக்டர், குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்றும், குழந்தை எவ்வித அசைவுமற்ற நிலையில் உள்ளதால் உடனடியாக மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறு அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருடைய வயிற்றுக்குள் இருந்த 6 மாத சிசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இதைக் கேட்ட அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இருதயரோசி சில்வியாவுக்கு பிரசவ வலி ஏற்படுவதற்காக மருந்து செலுத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஸ்கேன் பரிசோதனை முடிவை வைத்து பார்க்கும்போது ஓரிரு நாட்களுக்கு முன்பே வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது. தடுப்பூசி செலுத்தியதற்கும், சிசுவின் இறப்புக்கும் தொடர்பு இல்லை. அதே நாளில் தடுப்பூசி செலுத்திய மற்ற கர்ப்பிணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தலைப்பிரசவம் என்பதால் அறுவை சிகிச்சை செய்யாமல், சுகப்பிரசவமாக இறந்த சிசுவை வெளியே எடுக்க சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பிரசவம் முடிந்த பிறகுதான் சிசு இறப்புக்கான உண்மை காரணம் தெரியவரும்” என்று கூறினார். இச்சம்பவம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்