வருகின்ற திங்கட்கிழமை (03/09/2018) முதல், விநாயகர் சதுர்த்தியான 13/09/2018 வரை பத்து நாட்களும், வேட்ட வரம் தரும் கற்பக விநாயகருக்கு விழா என ஆவணித்திருவிழா நாட்கள் அறிவிக்கப்பட, விழாக்கோலம் பூண்டுள்ளது சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டி.
2 மீட்டர் உயரம் கொண்ட, இரண்டு கைகள் மட்டுமேக் கொண்ட குடவரைக் கோவிலில் அருள் பாலிக்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு எங்கும் இல்லாத அம்சமாக இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கை. ஏறக்குறைய 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும். மகேந்திரவர்ம பல்லவ மன்னனுக்கும் முந்தியதும் தான் இந்த விநாயகர். கேட்ட வரம் இந்த கற்பக விநாயகனுக்கு தேசிக விநாயகர் என்றும் பெயருண்டு. தொன்மையில் எருகாட்டூர், மருதங்குடி, திருவீங்கைகுடி, திருவீங்கைச்வரம் மற்றும் இராசநாராயணபுரம் என இவ்வூருக்கு பெயர் இருப்பினும் இன்று வரை நிலைத்திருப்பது என்னவோ, "பிள்ளையார்பட்டி" என்று தான். இங்கு மருதீசர் அர்ஜுனவனேசர், வாடாமலர் மங்கை எனத் தனித்தனி அம்பாள், சிவன் சன்னதிகள் இருக்கின்றன. எனினும், வடக்கு நோக்கி அமர்ந்தருளும் கற்பக விநாயகனுக்குத் தான் மார்கழி திருவாதிரை தவிர அனைத்து விழாக்களுமே.!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டூ திருப்புத்தூர் சாலையில் உள்ள பிள்ளையார்பட்டியில் பத்து நாட்கள் நடைபெறும் ஆவணித் திருவிழா மிகப்பழமையானது. முற்கால, பிற்கால பாண்டிய மன்னர்கள் ஆவணித் திருவிழாவினை நடத்தி வந்திருப்பினும், 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரத்தார் கையில் இக்கோவில் நிர்வாகம் வந்தது பிறகு தான் திருவிழாவே பண்டிகையானது.. பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த ஆவணித்திருவிழாவின் பத்தாம் நாளான விநாயகர் சதுர்த்தி அன்று, அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், "18 படி பச்சரிசி மாவு, 40 கிலோ வெல்லம், கடலைப்பருப்பு 6 படி, நெய் 1 படி மற்றும் தேங்காய் 50 உள்ளிட்ட கலவைகளை கொண்டு ராட்சத கொழுக்கட்டையை வேகவைத்து விநாயகருக்கு படைப்பார்கள்." இதனைக் காணவே கூட்டம் அலைமோதும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகனின் அருள் பெற சென்று வாருங்கள் பிள்ளையார்பட்டிக்கு.!!