
செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் கிராமத்தில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலத்தை, 66 தனிநபர்களுக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கின் புலன் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் கிராமத்தில், 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலம், 66 தனி நபர்களுக்கு சட்ட விரோதமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு, வழக்குப்பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த வழக்கில் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை எனவும், இந்த மெகா ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி, உள்துறை செயலாளருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.க்கும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
அதனால் தனது மனுவை பரிசீலித்து, இந்த நில ஒதுக்கீடு ஊழல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படியும், இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.