மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமையில் மக்களிடம் நேரடியாக மாவட்ட ஆட்சியர், அவர்களின் கோரிக்கை மனுக்களை வாங்குவார். அப்படி மனு கொடுக்க வரும் மக்கள் அனேக இடங்களில் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவர். ஆனால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை கேட்பு கூட்டத்திற்கு வந்த ஒருவர் வித்தியாசமான முறையில் தனது மனுவை அளித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்திற்கு வந்த விக்கிரவாண்டி அருகில் உள்ள அரசலாபுரம் ரகுராமன் வித்தியாசமான முறையில் மனுவைக் கொடுக்க முற்பட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ரகுராமன், திடீரென ஆட்சியர் அலுவலகம் வாசலில் ஒரு பூசணிக்காய் வைத்து அதன் மீது சூடத்தை கொளுத்தி பூஜை செய்தார். இதைக் கண்டு திடுக்கிட்ட பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், மாவட்டத்தில் கனிமவளங்கள் கொள்ளை நடக்கிறது. கள்ளச்சாராயம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. வழிப்பறி கொள்ளைகள் நடக்கிறது. இதனை எல்லாம் விசாரித்து முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதன் பிறகு, காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று ரகுராமனை எச்சரித்து அவரை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.