திண்டிவனத்தில் வாடகைக்கு கார் எடுப்பதாகக் கூறி கார்களை விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட ஆறு நபர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மூன்று கார்களைப் பறிமுதல் செய்துள்ளனர். திண்டிவனம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் என்பவரது மகன் ரமேஷ். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு விட்டுவருகிறார். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி அசோக்குமாரின் தம்பி ராஜேஷின் நண்பர் ரோஷனை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் அசோக்குமாரிடம் தனது மனைவி பிரசவ வலியில் துடிப்பதால் அவரை புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் அசோக்குமார் ராஜசேகருக்கு காரை கொடுத்துள்ளார். பின்பு மறுநாள் ராஜசேகரை தொடர்புகொண்டு காரை எடுத்துவரும்படி அசோக்குமார் கேட்டபோது, பேருந்து வசதி இல்லாததால் எனக்கு நான்கு நாட்களுக்கு கார் தேவை என்று ராஜசேகர் அழுததாக கூறப்படுகிறது. பின்பு 4 நாட்கள் கழித்து ராஜசேகரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அசோக்குமார், கார் சம்பந்தமாக கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக ராஜசேகர் பதில் அளித்துவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அசோக்குமார், கடந்த 18ஆம் தேதி ரோஷனை காவல் நிலையத்தில் ராஜசேகர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார், அசோக்குமாருக்கு சொந்தமான காரை ராஜசேகரிடமிருந்து மீட்டதுடன், இதுபோன்ற மோசடியில் விற்பனை செய்த மேலும் 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், வி.அகரம் பகுதியைச் சேர்ந்த ராஜா, பிரபு, விழுப்புரம் பானாம்பட்டு ரோட்டைச் சேர்ந்த பழனி, மயிலத்தை அடுத்த தழுதாளி ஆனந்த், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கொங்கையனூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், சோதனைபாளையம் ஸ்ரீதர் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான ராஜசேகரை போலீசார் தேடிவருகின்றனர்.