சில சம்பவங்கள் நம்ப முடியாததாகவும், நடுக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. அப்படியொரு சம்பவம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள கோபாலபுரம் கிராமத்தில் நடந்திருக்கிறது.
அருப்புக்கோட்டை - கோபாலபுரம் கிராமத்தில் இருந்து சற்று தள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதி உள்ளது. இங்கு மருத்துவர்கள் 3 பேர், செவிலியர்கள் 5 பேர், பணியாளர்கள் 4 பேர் பணிபுரிகின்றனர்.
பாலையம்பட்டியைச் சேர்ந்த கஞ்சா போதைப் பழக்கம் உள்ள மணிகண்டன், கடந்த 2-ஆம் தேதி இரவு, அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைந்து, அங்கிருந்த மருந்து, மாத்திரைகளைத் தள்ளிவிட்டார். அங்கு தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாகச் சுற்றித் திரிந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த செவிலியர் விடுதி அவர் கண்ணில்பட, விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்து, தனது நிர்வாணத்தை மறைக்க செவிலியர் உடையை அணிந்துகொண்டார். அங்கிருந்த செவிலியர் ஒருவரை பலவந்தமாகக் கட்டிப்பிடித்து கன்னத்தையும் கடித்துவிட்டார். அங்கு கிடந்த கம்பியைக் கையில் எடுத்து, நடந்ததை யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். கஞ்சா போதை மணிகண்டனிடம் போராடி தப்பித்த அந்த செவிலியர், அந்த அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்து சத்தம்போட, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்துள்ளது.
மணிகண்டன் கடித்ததால் ஏற்பட்ட காயத்துக்கு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அந்த செவிலியர் சிகிச்சை பெற்றுவருகிறார்.