Skip to main content

பேரறிவாளனுக்குப் பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: விசிக கோரிக்கை

Published on 23/10/2017 | Edited on 23/10/2017
பேரறிவாளனுக்குப் பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: விசிக கோரிக்கை

பேரறிவாளனுக்குப் பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இராஜீவ் கொலைவழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் திரு.பேரறிவாளன் அவர்களுக்கு, தமிழக அரசு அண்மையில் ஒரு மாத காலம் பரோல் என்னும் சிறைவிடுப்பு அளித்தது. பின்னர், பேரறிவாளன் அவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதகாலம் நீட்டிப்பு அளித்துள்ளது.

அவரது தந்தையின் உடல்நலம் பாதிப்படைந்துள்ள நிலையில், அவரைக் கவனிக்கவேண்டிய தேவையின் அடிப்படையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்றுதான், தமிழக அரசு அவருக்கு பரோல் அளித்தது என்பதை அனைவரும் அறிவோம்.

தற்போது, பேரறிவாளன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பரோல் அனுமதிக்கான கால அளவு முடிவுறும்நிலையை எட்டியுள்ளது. ஆனால், அவரது தந்தையின் உடல்நலம் இன்னும் தேறவில்லை. சென்னையில் அரசு பொதுமருத்துவமனையில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குரிய பணிவிடைகளைச் செய்வதற்கு மேலும் சில மாதங்கள் திரு.பேரறிவாளன் அவர்கள் உடனிருக்க வேண்டிய தேவை உள்ளது. அத்துடன், அவரும் தனது உடல்நலத்தையும் பாதுகாத்திட உரிய சிகிச்சைப் பெற வேண்டியுள்ளது.

எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரறிவாளனின் உடல்நலத்தையும் அவரது தந்தையின் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு மேலும் ஆறுமாத காலத்திற்குப் பரோல் அனுமதியை நீட்டித்து ஆணையிட வேண்டுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த இரண்டுமாத கால பரோல் அனுமதியின் போது பேரறிவாளன் அவர்களின் நடத்தையானது அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததேயாகும். எனவே, தமிழக அரசு அவரது 'நன்னடத்தை'யையும் கருத்தில் கொண்டு அவரது பரோல் காலத்தை இன்னும் ஆறுமாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டுமாறு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

சார்ந்த செய்திகள்