திருவாரூர் அருகே தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் அவரது சிலை மீது சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூர் கடைவீதியில் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலை உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, சோழங்கநல்லூர் கடை வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இதற்காக தி.க.வினர் சிலையை சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போது, அங்கு பெரியார் சிலையின் மீது லட்சுமி சிலை வைக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்த திராவிட கழக திருவாரூர் ஒன்றியச் செயலாளர் சாம்பசிவம், தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில், அவரது சிலை மீது சாமி சிலையை வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.க.வினர் கூறுகையில், "தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில், அவரது சிலை மீது சாமி சிலையை வைத்தவர்கள் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமைக் கழகத்துடன் கலந்து ஆலோசித்து போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.
தற்போது போலீஸார் பெரியார் சிலை மீது சாமி சிலை வைக்கப்பட்டது தொடர்பாக வைப்பூர் மற்றும் சோழங்கநல்லூர் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.