இன்று (13.04.2021) திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ''தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக - தொடர் விழாவாக நடத்திய எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு 1979இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்று பெயர் மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார். அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு - நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் - ‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்?
யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடனடியாக அதை இணையதளத்தில் இருந்து நீக்கி, ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், “சென்னை கிராண்ட் வெர்ஸ்டன் டிரங்க் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அது ஈ.வெ.ரா சாலை என அழைக்கப்படுவதுண்டு. தமிழக அரசின் ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் சாலை என்றுதான் உள்ளது” என தமிழக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.