சிவகங்கை மாவட்டம் சாத்திரசன் கோட்டையில் அமைந்துள்ளது மல்லல் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். 17 வயதான இவர், மல்லல் ஊராட்சி அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். திருமுருகனுக்குத் தனது ஊருக்குள் ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர்.
அவர்களுடன் சேர்ந்து சாத்திரசன் கோட்டையில் உள்ள மைதானத்தில் வாலிபால் விளையாடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மே மாதத்தில் வழக்கம்போல் திருமுருகன் தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய உறவுக்கார பையனான 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும், இவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்.
அந்த சமயம், மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் திருமுருகனுக்கும் அவருடைய உறவுக்கார பையனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவன் திருமுருகனை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன், அந்த மாணவனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அன்றைய நாள் ஏற்பட்ட பகை, மாணவனின் நெஞ்சில் நஞ்சை விதைத்தது. அதில், நாளுக்கு நாள் திருமுருகன் மீது ஏற்பட்டிருந்த கோபம் ஒருகட்டத்தில் வெறியாக மாறியுள்ளது. பள்ளி படிப்பை விட்டுப் பகையை வளர்க்கத் துணிந்தான் அந்த மாணவன்.
இத்தகைய சூழலில், திருமுருகன் தன்னைத் தாக்கியது குறித்து தனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவனுடன் சேர்ந்த கூட்டாளிகள் திருமுருகனைக் கொலை செய்ய முடிவு செய்திருந்தனர். இதற்கிடையில், கடந்த 26 ஆம் தேதியன்று திருமுருகன் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு அன்று மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மேலும், மரக்குளம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகே திருமுருகன் வந்துகொண்டிருந்தபோது, அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர்.
அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த முன்விரோத மாணவன், திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, இவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்படவே, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு திருமுருகனின் தலையிலேயே வெட்டியுள்ளனர். மேலும், பழிக்குப் பழி வாங்கிய மாணவன் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த திருமுருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த திருமுருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா போலீசார், திருமுருகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 7 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, முக்கிய குற்றவாளியான பள்ளி மாணவனையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தற்போது, முன்விரோதத்தால் ஏற்பட்ட பகையில் பள்ளி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மக்களைக் குலை நடுங்க வைத்துள்ளது.