
சென்னை கொளத்தூர் தொகுதியில் 210 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் பெயரிலான மருத்துவமனையை திறந்த வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், ''ஸ்டான்லி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு நிகராக பெரியார் மருத்துவமனை செயல்படும். பிறந்தநாளின் போது மனசுக்கு நெருக்கமான திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறேன். நம் பசங்களின் கல்விக்கு செய்வதை விட நமக்கு என்ன மகிழ்ச்சி இருக்கிறது. தமது சொந்த தொகுதியில் கட்டப்பட்ட பெரியார் அரசு மருத்துவமனையை திறந்து வைப்பதை பெருமையாகக் கருதுகிறேன். 2023-ஆம் ஆண்டு விளிம்பு நிலை மக்கள் நலனுக்காக மனிதக்கழிவை மனிதனே அகற்றக் கூடிய அவல நிலையை மாற்ற அதற்கான கருவிகளை தந்து பணியாளர்களையே தொழில் முனைவராக ஆக்கும் திட்டத்தை அறிவித்தேன். அந்தத் திட்டம் மூலமாக பலர் தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரமும் மேம்பட்டு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை தீர்த்து வைக்க நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திறந்து வைத்தேன். இந்த ஆண்டு நம்முடைய கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி இருக்கிறோம். இந்த மருத்துவமனை வடசென்னை மக்களுக்கு உயிர் காக்கக்கூடிய மருத்துவமனையாக காலகாலத்திற்கும் செயல்படும். வட சென்னையை வளர்ந்த சென்னை ஆக்க, நாம் எடுத்துக் கொண்டுவரும் முயற்சிகளில் இந்த பெரியார் மருத்துவமனை என்பது ஒரு மைல் கல். இந்த மருத்துவமனை கம்பீரமாக உருவாக்கி தந்ததற்கு முழு முயற்சியோடு ஈடுபட்டு, எல்லா வகையிலும் துணைநின்ற பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவிற்கும், அதேபோல் எந்த நேரத்திலும் சுறுசுறுப்பாக எல்லா விஷயங்களையும் கம்ப்யூட்டரை போல் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மா.சுப்பிரமணியன் அவருக்கும், தொடர்ச்சியாக எப்பொழுது நான் கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலும் என்னுடன் வரக்கூடியவர், மாவட்டச் செயலாளர், ஊக்கத்தை தொடர்ந்து அளித்து வரும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கும் என்னுடைய சார்பிலும், தகுதி மக்கள் சார்பிலும் நன்றி நன்றி.
இந்த மருத்துவமனைக்கு பெயர் வைப்பது சம்பந்தமாக அமைச்சர் சேகர்பாபு என்னை கேட்டார். பெரியார் நகரில் இருக்கும் இந்த பெரிய மருத்துவமனைக்கு பெரியார் பெயரையே வைக்கலாம் அதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னேன். அவர் தான் நம்முடைய சமூகப் பிணிகளுக்கு எல்லாம் மருத்துவம் பார்த்த சமூகம் மருத்துவர் பெரியார். அவர் பெயரை சூட்டியதில் பெரியாரின் தொண்டனாக பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்''என்றார்.