தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.
இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி திரைப்பட நடிகர் சத்யராஜ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், “சட்டப்பேரவையின் நேற்றைய நிகழ்வின் போது முதலமைச்சரின் புன்னகை என்னை வெகுவாகக் கவர்ந்தது. முதலமைச்சரின் புன்னகையில் பெரியாரின் சுயமரியாதை சுடர் விட்டது; அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது. தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்” எனப் பதிவு செய்துள்ளார்.