Skip to main content

''இது துரோகிகளுக்கான சரியான பாடம்'' - சி.வி. சண்முகம் பேட்டி

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

nn

 

கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், “உச்சநீதிமன்றம் இன்று கொடுத்திருக்கிற தீர்ப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. துரோகிகளுக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்கின்ற வகையில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதன்படி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் ரத்து செய்யப்படுகின்ற தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்க, வலிமையாக இந்த அதிமுகவை வழிநடத்த ஒற்றைத் தலைமை தேவை என்ற அனைத்து தொண்டர்களுடைய  விருப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

 

இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் அதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையும் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தை சிதைக்க வேண்டும் என திமுகவின் கைக்கூலியாக இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரோடு சேர்ந்த துரோகிகளின் துரோக செயலையும், அதிமுக அலுவலகத்தில் புகுந்து அடித்து உடைத்து சூறையாடி அதை கண்டித்து பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓபிஎஸ்  உட்பட அனைவரும் நீக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெளிவான சிறப்பான தீர்ப்பை கொடுத்துள்ளது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்