முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை குற்றவாளிகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபார்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிசந்திரன் என 7 பேர் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். சுமார் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகள், பெரும்பான்மை மக்களின் விருப்பமாக உள்ளது. இது தொடர்பான கோப்பு கவர்னர் கையெழுத்துக்காக உள்ளது. 2 ஆண்டுகளாகியும் அந்த கோப்பு மீது எந்த முடிவும் எடுக்காமல் வைத்துள்ளார் கவர்னர்.
இந்நிலையில் சிறையில் உள்ளவர்களை பரோல் வழங்கி குடும்பத்துடன் இருக்க அரசு முன்வரவேண்டும் என்கிறது. அதனையும் செயல்படுத்த அரசு விரும்புவதில்லை.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், சிறையில் கரோனா பரவுகிறது, ஏற்கனவே தன் மகன் பல்வேறு உடல் நோய்களால் அவதிப்படுவதால் அவருக்கு பரோல் வழங்கி வீட்டிலேயே வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தேன், என் மனுவை அவர்கள் பரிசீலிக்கவில்லை, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கேட்டு மனு செய்தார். இதன் மீதான நீண்ட விசாரணைக்கு பின் உயர்நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி ஆணை பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், அக்டோபர் 9ந்தேதி காலை 8 மணிக்கு புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார். வேலூர் மத்திய சிறையில் சிறை நடைமுறைகள் முடித்துக்கொண்டு அக்டோபர் 9ந்தேதி மதியம் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்.
இதனால் பேரறிவாளன் வீடு உள்ள பகுதி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரறிவாளன் வீட்டில் தங்கியுள்ள நாட்களில் திருப்பத்தூர் மாவட்ட போலிஸ் பாதுகாப்பு வழங்கவுள்ளது. ஒரு டி.எஸ்.பி தலைமையில் 15 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 ஷிப்ட்களாக போலிஸ் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.