பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்து மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இந்த இட ஒதுக்கீட்டு சட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.க மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது, இன்றும் வரவேற்கிறது. தமிழ்நாட்டின் மீது, தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அதன் பேரில் 2029 இல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம் நிறைவேற்றும் விசித்திர தந்திரம் எல்லாம் தோல்வி பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாய்மாலம்”என தெரிவித்துள்ளார்.