திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை விட 4 லட்சத்து 43 ஆயிரத்து 821 வாக்குகள் கூடுதலாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ஆகியோர். முன்னிலையில் வாங்கினார்.
அதன்பின் அமைச்சர்.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, ''இந்தியா கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆகையால் இந்தியா கூட்டணி கண்டிப்பாக அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேறும். மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆகையால் இந்தியா கூட்டணி அவசியம் ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது, மக்கள் விரும்புகின்றனர். ஆகவே இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்''என்றார்.