திண்டுக்கல் மாநகரில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் மூன்று ரயில்வே கேட் உள்ளது. இப்பகுதியில் மக்கள் போய் வருவது கடினமாக இருப்பதால் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி இன்னும் ஆமை வேகத்தில் தான் நகர்ந்து வருகிறதே தவிர பணியை முடிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் சுற்றி தான் தங்கள் வீடுகளுக்கு போய் வருகிறார்கள்.
இதைக் கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் பாலபாரதி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பாக அப்பகுதி மக்களை திரட்டி காத்திருக்கும் போராட்டத்தில் குதித்தார்.இந்த காத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் பாலபாரதி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது... பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலப்பணிகள் துவங்கி 4 ஆண்டுகளாக 70 சதவீதமான பணிகள் நிறைவேறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சகல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மேம்பாலப்பணிகளுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட மாநில அரசு வழங்கவில்லை. ஆகவே இடம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் பணிகள் நடைபெறாமல் மந்தமாக உள்ளது. ரயில்வே அதிகாரிகள் எங்கள் தரப்பில் அனைத்து பணிகளையும் நிறைவேற்றி உள்ளோம். மாநில அரசு தான் இன்னும் பணிகளை நிறைவேற்றாமல் உள்ளது என்று கூறுகிறார்கள். இது போன்ற மாநில அரசு மற்றும் ரயில்வே துறையின் நிர்வாக உள் குழப்பங்களால் போக்குவரத்து இடையூறு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் 70 பேர் வரை இறந்து உள்ளனர்.
2 முறை கோட்டாட்சியர் பரிசீலனை செய்து மாற்று வழி தருகிறோம் என்று உத்தரவாதமாக போராட்டங்களின் போது எழுதிக்கொடுத்தார்கள். ஆனால் இதுவரை எந்த மாற்று வழியும் செய்து தரப்படவில்லை. இந்தபிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நிர்வாகம் ஒரு அடி கூட நகரவில்லை. இதன் காரணமாக காத்திருப்போராட்டத்தை திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் நாங்கள் துவக்கியுள்ளோம். ஆனால் இந்த போராட்டத்தை திசை திருப்புவதற்காக காவல்துறை மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய அரசுக்கு எதிராக போராடுவதற்கு பதிலாக மாநில அரசை எதிர்த்து போராடுகிறீர்களே என்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.
மத்திய அரசின் ரயில்வே துறை எங்கள் பணியை முடித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய பணத்தை யார் தருவார்கள். அதிகாரிகள் மாறி மாறி பேசினால் நாங்கள் யாரிடம் போய் கோரிக்கை வைத்து பேசுவது. வனத்துறை அமைச்சர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் எப்படி பேசுவாரோ அதை போல ஒவ்வொரு பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார்.
அவரை நினைத்தால் இன்னும் கவலையாக உள்ளது. இப்படிப்பட்ட மிக முக்கியமான பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டதற்கு அவரும் ஒரு காரணம் ஆவார். அரசின் இந்த மெத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக திண்டுக்கல் பழனி கேட்டை திறந்து விட வேண்டும் அல்லது மாற்று வழி உடனடியாக செய்துகொடுக்க வேண்டும். நிலம் ஒப்படை செய்தவர்களுக்கு விரைந்த பணம் கொடுக்க வேண்டும். மேலும் இழுத்தடிக்காமல் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார்!