"குடிக்க தண்ணீர் இல்லை ஐயா, எங்க குடிநீர்ப் பஞ்சத்தை போக்குங்கனு" மனு கொடுத்தா அதுக்கு பதிலா டாஸ்மாக் குடிய கொண்டு வந்து விடறாங்களே என புலம்பிக் கொண்டே ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்தனர் அந்த மக்கள்.
ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம், ஒசபட்டி, எலயம்பாளையம் புதூர், ஜேஜே நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தான் அவர்கள் பிறகு கலெக்டர் கதிரவனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அவர்கள் அந்த மனுவில் கூறியிருப்பது,
பெத்தாம்பாளையம் ஒசபட்டி விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை கொண்டு வருவதற்கு அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். மதுபானக் கடை அமைய உள்ள இடத்தின் அருகிலேயே பெத்தாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியும், துணை சுகாதார நிலையமும் உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பொதுமக்கள் பஸ் நிறுத்தத்திற்கும், சுகாதார நிலையத்திற்கும் செல்ல வேண்டும். இங்கு டாஸ்மாக் கூடாது என எவ்வளவோ முறை சொல்லிவிட்டோம் ஆனால் அரசாங்கத்திற்கு வருவாய் குறையுதாம் ஆகவே இப்பகுதி பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மதுபானக்கடை வைக்க வேலைகள் செய்து வருகிறார்கள்.
அப்படி அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், நோயாளிகளுக்கும் பெரிய சிரமங்களும், மன உளைச்சளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்வேறு கிரிமினல் சம்பவங்கள் நடக்கும் அதனால் எங்கள் பகுதியில் மதுபானக் கடை அமைவதை தடுத்து நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மேலும் அவர்கள் கழிப்பிட வசதி கேட்டோம், குடிநீர் வசதி கேட்டோம் குடி கெடுக்க குடி வசதி செய்கிறார்களே...? என்றனர்.
இதேபோல் ஈரோடு பவானி ரோட்டில் லட்சுமி தியேட்டர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை சுண்ணாம்பு ஓடை பஸ் ஸ்டாப் அருகே உள்ள மற்றொரு கடை கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் உள்ள ஒரு கடை, என ஈரோட்டில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.