தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் தமிழகம் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மேற்கு புறநகர் மாவட்டம் சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி எம்.எல்.ஏ. வுமான செங்கோட்டையன் பேசும் போது, "புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் 1972ல் அதிமுக துவக்கப்பட்டது. அவர் மனிதநேயமிக்க தலைவர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கைரிக்க்ஷா தொழிலாளிகளுக்கு மழை கோட்டு வழங்கியவர். அனைவருக்கும் உணவு வழங்கியவர். நாடோடி மன்னன் படத்தில் தீண்டாமையை எதிர்த்து பேசினார் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஊர்களிலும் போர்வெல்கள் அமைத்து குடிநீர் பிரச்சனைக்கும், தீண்டாமைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அவரது வழியில் வந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா கல்வி வளர்ச்சிக்காக 14 விலையில்லா பொருட்களை வழங்கினார். 55 லட்சம் மடிக்கணினிகளையும், மிதிவண்டிகளையும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியவர்.
அனைத்து குடும்பங்களுக்கும் 25 கிலோ இலவச அரிசி வழங்கி ஏழையின் கண்ணீரை துடைத்தார். அவர்கள் வழியில் எடப்பாடியார் நான்காண்டு காலம் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தார். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் 42 லட்சம் குழந்தைகளுக்கு ஒரே நாளில் சத்துணவு திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தினார். ஆனால் இன்று 1.47 லட்சம் குழந்தைகளுக்கு மட்டுமே காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது வீட்டு வரி, மின் கட்டணம், குடிநீர் செஸ் கட்டணம் என அடுக்கடுக்காக சுமை ஏற்றப்பட்டுள்ளது. அதிமுக அரசின் பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அதிமுக செய்தது. ஆனால் இன்று மக்களின் துயரங்கள் அதிகரித்துள்ளன. எனவே அனைத்து வரி உயர்வையும் வாபஸ் பெற வேண்டும். மின்கட்டண உயர்வை வாபஸ் பெற சட்டமன்றத்திலும் நாங்கள் குரல் எழுப்புவோம்.
அதிமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது. எந்த வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம். இந்த தமிழ் மண்ணில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. வாக்களித்த மக்கள் இப்பொழுது தவறை உணர்கிறார்கள். எப்போது தேர்தல் வரும் என்று காத்திருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதிமுகவை கோட்டையில், ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி உள்ளனர். யார் யாரோ ஏதோ கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்ற 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும்...." என செங்கோட்டையன் பேசி முடித்தார். அப்பொழுது கீழே இருந்த நிர்வாகி ஒருவர் "அப்படா பி.ஜே.பி. கூட்டணி இல்லே அப்படித்தானே..." என்றார் செங்கோட்டையனை பார்த்து. அதற்கு செங்கோட்டையன் அமைச்சர் சேகர்பாபு போல காது கேட்கலே என சைகையால் கூறிவிட்டு சென்றார்.