மக்களை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெள்ளிக் கிழமை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. தஞ்சையில் கூட்டம் தொடங்கும் முன்பாக கூடிய விவசாயிகள் ஹைட்ரோ கார்ப்பனை ரத்து செய்! டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கு என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.
புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் கூட்டம் நடந்தது. விவசாயிகள் பலரும் குளம், ஏரி, கன்மாய்கள், வரத்துவாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அதிகாரிகள் சீரமைக்கப்பட்டுவிட்டது என்று சொல்ல ஏதாவது சில குளங்களின் பெயரை சொல்லுங்கள் என்று விவசாயிகள் கேட்க.. அந்த பட்டியல் இங்கு இல்லை என்று பதில் சொல்லி விலகினார்கள். அப்போது.. 100 நாள் வேலை திட்டத்தில் குளங்களில் உள்ள புல்லை அகற்றிவிட்டு குளம் தூர்வாரியதாக கணக்கு எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றனர்.
அதேபோல ஒரு விவசாயி எழுந்து டாப்செட்கோ திட்டத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து வருடக்கணக்கில் ஆகிவிட்டது. ஆனால் மின்சார வாரியம் எங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்
அதற்கு அங்கு வந்திருந்த மின்வாரிய அலுவலர் பதில் சொல்லுங்கள் என்று ஆட்சியர் சொல்ல.. அந்த கோப்புகளை கலெக்டர் ஆபிசுக்கு அனுப்பிட்டோம் என்றார். கலெக்டர் ஆபிஸ்ல யாருக்கு அனுப்புனீங்க என்று ஆட்சியர் கேட்க.. கலெக்டர் ஆபிசுக்கு தான் அனுப்பினோம் என்று மறுபடியும் பதில் சொன்னார் மினவாரிய அதிகாரி.
கலெக்டர் ஆபிசுக்கு தான் வழக்கமாக அனுப்புவோம். அதேபோல கலெக்டர் ஆபிசுக்கு அனுப்பிட்டோம் என்று மறுபடியும் மின்வாரிய அதிகாரி சொன்ன பதில் கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியும் செந்திலும் வாழைப்பழம் பற்றி பேசுவது போல இருந்தது விவசாயிகள் சிரித்துவிட்டனர். கடுப்பான ஆட்சியர்.. வேற யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் டாப்ஜெட்கோ பைல் மின்வாரியத்தில் இருந்து கலெக்டர் ஆபிசுக்கு எங்கே வரும் என்று கேட்க.. அதன் பிறகு ஒரு அதிகாரி எழுந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அனுப்புவோம் என்று சொன்ன பிறகு.. இதை தான் கேட்டேன். யாருக்கு அனுப்புறோம் என்பது கூட தெரியல. மாலை 5 மணிக்குள் அந்த பைல் பற்றிய முழு விபரங்களும் வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிக்கும் உத்தரவிட்டார்.
அதேபோல மிசா மாரிமுத்து எழுந்து காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் வருமா வராதா? முந்தைய ஆட்சியர் இது சம்மந்தமாக ஆய்வுக் கூட்டம் நடத்தச் சொன்னார். இதுவரை நடத்தவில்லை. கூட்டம் நடக்குமா நடக்காதா? என்ன நிலையில் இருக்கிறது என்றார். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரி பதில் சொல்லுங்கள் என்றார் ஆட்சியர்.. எழுந்த பொதுப்பணித்துறை அதிகாரி.. கோதாவரி இணைப்புத் திட்டம் நடந்தால் தான் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நடைமுறைக்கு வரும் என்றார். கோதாவரிக்கும் குண்டாறுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு என்று கடுப்பான ஆட்சியர் சரி கூட்டம் நடத்தப்படுமா என்று கேட்கிறார் அதற்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
இப்படி விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள் காமடி செய்வதை பார்த்து ஆட்சியர் கடுப்பாகிவிட்டார்.