கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ளது குருங்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவனேசன்(60). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது நான்கு முட்டைகளைக் கண்டெடுத்துள்ளார். அந்த முட்டைகள் பறவை இனத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என எண்ணி அந்த முட்டைகளை வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார். அதனைத் தனது வீட்டில் வளர்த்து வந்த நாட்டுக் கோழி முட்டைகளுடன் சேர்த்து அடைகாக்க வைத்தார் சிவனேசன்.
வயலில் கண்டெடுத்த 4 முட்டைகளையும் சேர்த்து வைத்து நாட்டுக்கோழி அடைகாத்து வந்தது. 20 நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன. அந்த குஞ்சுகளும் கோழியுடன் கூடி கீழே கிடக்கும் தானியங்களையும், பூச்சி, புழுக்களையும் சாப்பிட்டு வளர்ந்து வந்துள்ளன. பின்னர் அது மயில்கள் என அறிந்த விவசாயி சிவனேசன் இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் கேட்டபோது, மயில் குஞ்சுகள் வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம்; எனவே இந்த குஞ்சுகளைக் கொண்டு சென்று வனத்துறையிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். உடனே அந்த நான்கு குஞ்சுகளையும் எடுத்துக்கொண்டு காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதனிடம் கொண்டு சென்று ஒப்படைத்தார் விவசாயி சிவனேசன். குஞ்சுகளைப் பார்த்த தீயணைப்புத் துறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினரின் ஆலோசனையின்படி அந்த நான்கு மயில் குஞ்சுகளையும் வனப்பகுதியில் கொண்டுவிடுமாறு கூறியுள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் அந்த நான்கு மயில் குஞ்சுகளையும் தீயணைப்புத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.