ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: தேசிய புலனாய்வு துறையினர் விசாரணை
சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.எஸ். என்ற பழமைவாத பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் பணியில் இந்தியாவில் உள்ள சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.,) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
கடந்தாண்டு கேரளா மாநிலம், கண்ணனுார் அருகே கனகமலையில் பதுங்கியிருந்ததாக கூறி கோவையை சேர்ந்த ரஷித்அலி உள்பட ஆறு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கோவையை சேர்ந்த சிலரிடம் கடந்த மாதம் விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து லேப்டாப், மொபைல் போன்களை கைப்பற்றினர்.
இரு மாதங்களுக்கு முன் கொச்சி நீதிமன்ற அனுமதியுடன் கோவை, தெற்கு உக்கடம், கோட்டை புதுாரை சேர்ந்த அப்துல்ரகுமான் (வயது- 23). கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்த முகமது அப்துல்லா (வயது-25) வீடுகளில் சோதனை நடத்தி, 77-'சிடி'க்கள், மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களுடன், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதனடிப்படையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் ரஹமத்துல்லா (வயது-30) என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்க சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை.
இதையடுத்து, அவரது உறவினர்களிடம் பேசிய அதிகாரிகள் ரஹமத்துல்லாவை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர்.
இதன்பின், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் மொபைல்போன் கடை வைத்துள்ள டீச்சர்ஸ் காலனியில் உள்ள ரங்கராஜா லே-அவுட்டை சேர்ந்த அஸ்லாம் மகன் அமீர்(வயது-26) என்பவர் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், அவரை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் அமீரின் மொபைல் போன் கடையிலிருந்து ரஹமத்துல்லா ஐந்து சிம் கார்டுகளை பெற்றுள்ளார். இதில் ஒரு சிம் கார்டு மூலம் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்களுடன் பேசி வந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முதல் கட்ட விசாரணைக்குப் பின், இருவரையும் கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர். விசாரணை முடிவில் தான், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்...” என்றனர். அமீர் எம்.பி.ஏ., பட்டதாரியாவர் கல்லூரி படிப்பை முடித்ததும், மொபைல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
அவரது கடையில் சிம் கார்டு வாங்கிய ரஹமத்துல்லா மேட்டுபாளையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரையும் கொச்சியிலுள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் வரும், 9-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
- சிவசுப்பிரமணியம்