Skip to main content

விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர்காப்பீடு வழங்க - பொதுமக்கள் கோரிக்கை!

Published on 28/12/2017 | Edited on 28/12/2017
விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர்காப்பீடு வழங்க - பொதுமக்கள் கோரிக்கை!

விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விளங்குளம் மக்கள் நேர்காணல் முகாமில் வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.



தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் விளங்குளம் ஊராட்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமையில் புதன்கிழமை அன்று மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் எல். பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார், துணை வட்டாட்சியர் செல்வராஜ் (நில அளவை), வருவாய் ஆய்வாளர்கள் சுரேஷ், சத்யராஜ், பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், ராஜ்குமார் மற்றும் வேளாண்மை, சுகாதாரம், மின்வாரியம், கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வீ.கே. முத்தையா பேசுகையில், " விளங்குளம் கிராமத்திற்கு என தனியாக கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக  இழப்பீடு பெற்றுத்தரவேண்டும். உயர்நிலைப்பள்ளிக்கு மீதமுள்ள சுற்றுச்சுவரை கட்டித்தரவேண்டும். திருக்குளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை அமைத்து தரவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்து பேசினார்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட, வருவாய் கோட்டாட்சியர் 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை மற்றும் 10 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை  வழங்கி பேசுகையில், " தகுதியுள்ள விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு இழப்பு தொகை உடனடியாக பெற்றுத்தரப்படும்.

பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும். விளங்குளம் திருக்கோயில் சுற்றுச்சுவர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மேய்ச்சல் தரிசு, புஞ்சை நிலங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆய்வு செய்யப்படும்" என்றார். மேலும் அவர் பேசுகையில், "இதுபோன்ற முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு விபரம் அளிக்க வேண்டும்" எனவும் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தினார். நேர்காணல் முகாமையொட்டி சேதுபாவாசத்திரம் வட்டார சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்