விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கிறிஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், சென்னை, கோவை மாவட்டங்களில், கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். நான்காவது நாளாக இன்றும் சில இடங்களில் சோதனை தொடர்கிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள 'இயேசு அழைக்கிறார்' நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் சிக்கியதாகவும், சுமார் 120 கோடி ரூபாய் கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மேலும், பிரச்சாரக் கூட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கணக்கில் காட்டாமல் வெளிநாட்டில் பதுக்கியது அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டு நிதியை பல்வேறு நிறுவனங்களில் வெளிநாடுகளிலேயே முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நான்கு நாட்கள் நடந்த சோதனைக்கு பால் தினகரன் குடும்பத்தினர் ஒத்துழைப்பு தந்தனர்.
சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பால் தினகரன் அடுத்த வாரம் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தற்போது கிறிஸ்துவ மத போதகர் பால் தினகரன் வெளிநாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.