தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நீதிமன்றங்கள் வழியை மறித்து வாசலில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நீதிமன்ற பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை நீதிபதியின் கார் வெளியே செல்ல முடியாத வகையில் சில வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சேகரின் காரும் நின்றுள்ளது. இதனைப் பார்த்து வாகனங்களை எடுக்கச் சொன்ன போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் அவரது காரை பட்டுக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சி பிரமுகர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற நுழைவாயில், வளாகம் பகுதியில் தொடர்ச்சியாக ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நீதிமன்றங்களுக்கு வருவோர் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.