மதுரையில் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரையில் கடந்த 2019- ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக புகார் எழுந்தது. அதன்பேரில், 175 பாஸ்போர்ட்களில் இலங்கைத் தமிழர்கள் போலி ஆவணங்கள் மூலம் 28 பாஸ்போர்ட்கள் பெற்றது தெரிய வந்த நிலையில், மதுரை நகர க்யூ பிரிவில் ஏழு பேர் மீது வழக்குகள் பதிந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி பாஸ்போர்ட் வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தெரிவித்துள்ளது.
காவல்துறை அலுவலர்கள், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், தபால் துறை அலுவலர்கள் உள்பட 41 பேர் குற்றம் புரிந்துள்ளதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு, விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 14 பாஸ்போர்ட் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை உரிய முன் அனுமதி தரவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.