Skip to main content

தவறவிட்ட குழந்தையை திரும்ப பெற தவிக்கும் பெற்றோர்!  

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

Parents who went in search of a lost child!

 

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் கவியரசு(28). இவர், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த விமலா(32) எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வேலூரில் விமலா தள்ளுவண்டி கடைப் போட்டு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி கணவர் கவியரசுவிடம் விமலா வியாபாரத்திற்கு முதலீடு செய்ய பணம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. 

 

அதில் கோபமுற்ற விமலா, ‘குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு போ’ என்று கணவரிடம் கோபமாக கூறியுள்ளார். கவியரசும் 6 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு அன்று இரவு 11 மணி அளவில் புதுச்சேரி நோக்கி பஸ்ஸில் வந்துள்ளார். அவர் வந்த பஸ் கல்பாக்கம் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்றுள்ளது. அப்போது பஸ்சில் பயணம் செய்த (சரஸ்வதி) ஒரு பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளார் கவியரசு. 

 

திரும்பிவந்து பஸ்ஸில் ஏறுவதற்குள் அந்த பஸ் புறப்பட்டு சென்றுவிட்டது. குழந்தையை பெண் பயணியிடம் கொடுத்துவிட்டு தவித்த கவியரசு, அதன் பிறகு வேறு ஒரு பஸ்ஸை பிடித்து புதுச்சேரி பஸ் நிலையம் வந்து பல்வேறு இடங்களில் குழந்தையை தேடி அலைந்துள்ளார். குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தனது மனைவி விமலாவிடம் சம்பவத்தை கூறி அழுதுள்ளார். 

 

இந்தநிலையில் பஸ்ஸில் குழந்தையை தவறு விட்டுவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருவதாக பத்திரிகை செய்தி வெளிவந்தது. இதை அறிந்த கவியரசு, அவரது மனைவி விமலா இருவரும் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவங்களை கூறி குழந்தையை தருமாறு கேட்டுள்ளனர். குழந்தை உங்களுடையது தான் என்பதற்கான ஆதாரம் என்ன கொண்டு வந்துள்ளீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். 

 

ஆனால், அவர்கள் இருவரும் ஆதாரம் எதுவும் எடுத்து வராததால், குழந்தையை காவல்துறையினர் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் உங்கள் குழந்தை தான் என்பதற்கு உரிய ஆதாரங்களை எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதன்படி, அவர்கள் இன்று ஆதாரங்களை எடுத்துக் கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க சென்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்