“எங்க மகனை பார்க்கவோ, பேசவோ விடமாட்றாங்க...” என கோவை சம்பவத்தில் கைதானவர்களைச் சந்திக்கப் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் அருகே காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவரது வீட்டுக்குள் 75 கிலோ வெடி பொருட்கள் பதுக்கி இருப்பதும் போலீஸ் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அதில் 5 பேர் உபா சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் கோவை சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்க்க அவரது குடும்பத்தினர் சிறைத்துறையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், அவர்களைப் பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை எனக் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறும்போது “நாங்க எங்களுடைய மகனை பார்க்க, மனு கொடுத்தும் அந்த மனுவை திரும்ப அனுப்பிட்டாங்க. மீண்டும் காலையில் 10 மணிக்கு சிறைத்துறைக்கு மனு அனுப்பினோம். அப்போ கூட எங்கள் மகனை பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கவில்லை. இந்த நாட்டுல நீதியெல்லாம் செத்துப்போச்சி” எனத் தெரிவித்துள்ளனர்.