
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, கள்ளிக்கோட்டை சிவன் கோயிலையும், கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தபோது, அங்குப் புதிதாக இரு துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துப் படித்து ஆய்வு செய்தார்.
இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “சிவன் சன்னதியில் ஆறு துண்டுக் கல்வெட்டுகளையும், அம்மன் சன்னதியில் ஒரு கல்வெட்டையும் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மேற்பகுதி முழுவதும் இடிந்துள்ள சிவன் சன்னதி முன்மண்டபத்தின் கீழே ஜகதியின் பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் மேலும் இரு துண்டுக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புதிய கல்வெட்டு
இவை கி.பி.13-ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டுகள் ஆகும். இதில் இரண்டு வரிகள் உள்ள ஒரு கல்வெட்டில் ஸ்ரீகோமாறபன்மறான திரிபுவனச் சக்கரவர்த்தி எனக் குறிப்பிடப்படுவது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனாக இருக்கலாம். மற்றொரு 4 வரிகள் கொண்ட கல்வெட்டில், இக்கோயிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தில் ஐப்பசிக் குறுவை விளையும் கலத்துக்கு ஒன்று பாதியும், (சந்தி)விக்கிரகப்பேறு ஆகிய வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் மிழலைக்கூற்றம், திருக்கானப்பேற் கூற்றம் ஆகிய கூற்றங்களின் பெயர்கள் வருகின்றன.

கோயில் வரலாறு
மதுரை பராக்கிரம பாண்டியன், திருநெல்வேலி குலசேகரப்பாண்டியன் இடையே கி.பி.12-ம் நூற்றாண்டில் தொடங்கிய வாரிசுரிமைப் போர், அவர்கள் மகன்கள் விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் என மாறி மாறி ஆட்சியில் இருப்பதற்காகத் தொடர்ந்து நடந்து வந்தன. விக்கிரம பாண்டியன் மகன் முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் காலத்தில், மூன்றாம் குலோத்துங்கசோழன், பாண்டியநாட்டில் வீராபிஷேகம் செய்ய முனைந்தபோது அதை எதிர்த்ததால், மட்டியூர், கள்ளிக்கோட்டை ஆகிய ஊர்களில் போர் நடந்தது.
கோயிலில் உள்ள பாண்டியர் கால துண்டுக்கல்வெட்டுகளின் சொற்களைக் கொண்டு இவை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடையவை எனக் கருதலாம். அம்மன் சன்னதியில் உள்ள கி.பி.1538-ம் ஆண்டுக் கல்வெட்டில், நாடாமங்கலமான சுந்தரத்தோள் நல்லூர் என இவ்வூரும், நயினார் தவச்சக்கரவத்திஸ்வரமுடைய நயினார் என இறைவனும் அழைக்கப்பட்டுள்ளது.

அம்மன் சன்னதி அரைத்தூண்களில் நர்த்தன கணபதி, முருகன், நின்றநிலையில் லகுலீசபாசுபதரின் சிறிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு கைகளுடன் நின்றநிலையிலான லகுலீசபாசுபதர் சிற்பம் அரியவகையாகும். பெரும்பாலும் அவர் சிற்பங்கள் அமர்ந்தநிலையிலேயே கிடைத்துள்ளன.
இக்கோயிலில் கோளகி மடம் செயல்பட்டுள்ளது. சைவ மடங்களில் துறவிகளுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வந்த இதில் பாசுபதம், லகுலீச பாசுபதம், காளாமுகம் ஆகிய பிரிவினர் இருந்துள்ளனர். இங்குள்ள ஒரு பாண்டியரின் துண்டுக்கல்வெட்டு, இக்கோயிலில் இருந்த கோளகி மடம், அதன் ஆசாரியர் அவருடைய சிஷ்யர்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
மேற்கு நோக்கிச் சாய்ந்த நிலையில் சிறியலிங்கம், லகுலீசபாசுபதர் சிற்பம், கோளகி மடம் ஆகியவற்றால் பாண்டிய வம்சாவழியினர் அல்லது சித்தர் போன்றோரின் பள்ளிப்படைக் கோயிலாக, பாண்டியர் சோழர் போருக்குப்பின், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். பாண்டியர், சோழர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த இடிந்து அழியும் நிலையில் உள்ள இக்கோயிலை, பழமை மாறாமல் புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையை அவர் கேட்டுக் கொண்டார்.